
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோஸ்ட் மாகாணத்தின் கோர்பஸ் மாவட்டத்தில் முகல்காய் என்னுமிடத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் மற்றொரு தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குணார், பக்திகா ஆகிய இடங்களில் நிகழ்ந்த தாக்குதல்களில் பொதுமக்கள் நால்வர் காயமடைந்ததாகவும் ஆப்கன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


