
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருதலைக் காதலால், இளம்பெண்ணைக் குத்தி கொலை செய்ய முயற்சித்த காதலன், ஊர் மக்களுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த திருவாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவர் செய்யூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே போன்று மதுராந்தகம் இரும்பேடு அடுத்துள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் இதே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் நட்பாகப் பழகி வந்துள்ளனர்
நாளடைவில் அந்தப் பழக்கமானது கார்த்திக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கார்த்திக் ஒருதலையாக அப்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திக், பெண்ணின் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
அப்பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்று வருவதால், கார்த்திக் கோபம் அடைந்து என்னை ஏற்றுக் கொள்ளாமல், திருமணம் செய்து கொள்வாயா என்று அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்துவதற்கு முயற்சித்தபோது, அங்கு இருந்த பெண்ணின், பெரியம்மா ஜோதி அம்மாள் என்பவரைக் குத்தியதில் வலது பக்க கழுத்தில் காயம் ஏற்பட்டு செய்யூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விராலூர் அருகே பதுங்கி இருந்த கார்த்திக் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு கழுத்து பகுதியில் கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் செய்யூர் அரசு மருத்துவமனையில் அவரைசிகிச்சைக்காக அனுமதித்து மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒருதலையாகக் காதலித்து வந்த கார்த்திக், தான் காதலித்து வந்த பெண்ணைக் கொலை செய்ய முயற்சித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



