odisha:இனி பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு..எதற்குத் தெரியுமா?

Advertisements

புவனேஸ்வர்:மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

மாதவிடாய் விடுப்பு

ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அம்மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா கலந்து கொண்டார். அப்போது, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறினார்.

மாநில அரசுப் பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும், பெண்களின் உடல் ஆரோக்ய நலனில் இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே இரு மாநிலங்கள்

இந்தியாவில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும் தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருக்கிறது. பீகாரில் மாதந்தோறும் 2 நாட்கள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அதேபோல, கடந்த 2023ம் ஆண்டு முதல் கேரளாவில் உள்ள பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடந்த 2020 முதல் ஷொமேட்டோவில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் கருத்து

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், அவர்களைப் பணியிடங்களிலிருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுவரவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *