மழைக் காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு உத்தரவு.!

Advertisements

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத்துறை செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும், மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, போதிய தளவாடங்கள் இருப்பு வைத்திருப்பதுடன், மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார வினியோகம், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மின் வாரிய பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்யவும், மாநில அளவில் மின்சார தளவாடப்பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்லவும், பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை, டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

மேலும், கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின்சார கம்பங்களின் மீது விழுந்து சேதமடையும்போது, உடனடியாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் மின்தடை புகார்களை, மின்னகத்தில், 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும், டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மின்தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் டி.சிவக்குமார், இயக்குநர்கள் ஏ.செல்லக்குமார் ஏ,கிருஷ்ணவேல் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *