Nirmala Sitharaman: நாளை தூத்துக்குடியில் ஆய்வு!

Advertisements

கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் தமிழ் நாட்டில் பெய்த அதிகனமழை காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகள் முதற்கொண்டு விளை நிலங்கள்,  சாலை வரை அனைத்துமே பெருமளவில் பாதிக்கப்பட்டு மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் உள்ளனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் பதிவில், “மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 26-ந்தேதி (நாளை) மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். மேலும்  மதியம் 12.30 மணிக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் நிர்மலா சீதாராமன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

இதற்கு முன்பாக  மத்திய குழுவினர் வந்து  ஆய்வு   செய்து    சென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர்.  தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *