
சென்னையில் TEMPLE TOWN என்று அழைக்கப்படும் நங்கநல்லூர் ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் பற்றி பார்க்கலாம்.
தல வரலாறு:
1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு பள்ளிகூட வாத்தியாரின் முயற்சியால் முதலில் பத்து வருடங்களில், அத்தி மரத்திலான எட்டு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கி, ஜெயந்தியை மேலும் விமரிசையாக் கொண்டாடினர். பின்னர் நங்கநல்லூரில் உள்ள “ராம் நகரில்” ஏழு கிரவுண்ட் பரப்பளவு உள்ள நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முதற்கல்:
சிலை வடிப்பதற்கான கருங்கல் தேடப்பட்டு. வந்தவாசி அருகில் உள்ள பரமநல்லூர் என்ற இடத்தில் உள்ள கல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் கல்லின் மேல் பாகம் மட்டும் தான் நிலத்திற்கு மேல் தெரிந்தது. ஸ்ரீகிருஷ்ணா சிலை செய்வதற்காக பிர்லாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அளவு பற்றத்தால் எடுத்து செல்லப்படாத கல் என்று தெரிந்தும், குழு கல்லை வெளியே எடுக்கும் சிரமம் பாராமல், கல்லில் ஒரு சிறிய பாகத்தை வெட்டி எடுத்து காஞ்சி எடுத்துச் சென்றது. மௌன விரதத்தில் ஸ்ரீ பரமாச்சார்யார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனத்தினால், இந்தக் கல் சரியானதே என்று ஆசி கூறினார்.
முதல் பயணம்:
கருங்கல்லைப் பெயர்த்து எடுக்கும் வேலை பல சிரமங்களுடையே வெற்றிகரமாக நடந்தது. வண்டியோட்டி ஒரு கிறிஸ்தவர், வண்டி உரிமையாளர் ஒரு முகமிதியர், கொண்டுவர முயற்சி செய்யும் குழுவோ இந்துக்கள். பழவந்தாங்கலில் ரயில் பாதையை கடந்தது மிகவும் வியக்கத்தக்க நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம நாமத்தை ஜபிக்க, பத்தடி அகல வண்டி, இருபது அடி அகலமே கொண்ட தெருவை மிகவும் லாவகமாக் கடந்தது. நங்கநல்லூரில் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும், தீபாவளி பட்டாசுகள் போல அந்த வண்டியின் டயர்கள் வெடித்தன.
முதல் மரியாதை:
சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சிலை வடிப்பது அந்த சிற்பிக்கு ஒரு கடினமான காரியமாக இருக்கவில்லை. ஆஞ்சநேயர் தானாகவே அந்தக் கல்லிருந்து வெளியே வந்து விட்டார்.
முதல் அநுக்கிரகம்:
சிலை முழுவதும் வடித்த பிறகு, தெய்வீக சக்தி பெறுவதற்கு, சிலைக்கு பால்வாசம், ஜலவாசம், பூவாசம், தான்யவாசம் என்று பல வாசங்கள் செய்யப்பட்டன. பன்னிரெண்டு ஆயிரம் லிட்டர்கள் பால் கோடை காலத்திலும் கெடாமல் இருந்தது விந்தையிலும் விந்தை. ஜலவாசத்திற்குப் பிறகு அந்த தண்ணீர்த் தொட்டி உடைந்ததும் ஒரு தெய்வ செயலாகும். தொண்ணூறு டன்கள் எடையுள்ள சிலையை உயரத்திலிருந்து பீடத்தில் இறக்கியது ஒரு விஞ்ஞான விந்தை.
முதலில் பிரதிஷ்டை:
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தான் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பிறகு கோவில் கட்டிடம் கட்டப்பட்டது. அதற்குப்பிறகு இம்மாதிரி கட்டப்பட்ட முதல் கோவில் இது தான் என்று கருதப்படுகிறது. தொண்ணூறு இரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு தங்கத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரப்படி கோவில் கட்டபட்டது. ராமர், கிருஷ்ணர், கருடர், விநாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டன.
முதல் கும்பாஷேகம்:
1995 மே மாதம் 19ம் தேதியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக அனைத்து ஆகம சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தன்று நடைபெறவேண்டிய கோதானம், பூமிதானம் முதலிய எல்லா விதமான தானங்களும் குறைவின்றி நடந்தேறின. ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு லட்சம் பக்தர்கள் விஜயம் செய்யும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்தியா முழுவதும் உள்ள ஆஞ்சநேய பகதர்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு ஹனுமன் ஜெயந்தி, ராம நவமி, கொலு, தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி கோவில், அர்த்தநாரீஸ்வரர் கோவில், அய்யப்பன் கோவில், ஹயகீரிவர் கோவில் போன்றவை மிகவும் பிரசித்தம்.. சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். ஆதி வியாதிகளும் இவரை வணங்கினால் தீரும் என்பது நம்பிக்கை.

