
பெருந்தலைவர் காமராஜர் திமுகவின் கட்டுக்கதைகளால் வீழ்த்தப்பட்டார் என்று கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகத் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவருமான காமராஜர் ஒன்பதாண்டுக்காலம் முதலமைச்சராக இருந்தபோதும் சென்னையில் வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அந்த வீட்டுக்குத் தன் குடும்பத்தினர் யாரையும் அவர் வரவழைத்ததில்லை, வரவிடவும் இல்லை.
1975 அக்டோபர் இரண்டாம் நாளில் அவர் இறந்தபோது இரண்டுசோடி வேட்டி சட்டைகள், புத்தகங்கள், சட்டைப்பையில் இருநூறு ரூபாய்ப் பணம் இவ்வளவுதான் இருந்ததாகக் கூறுகின்றனர். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற தலைவர் ஏசி அறை இல்லாமல் உறங்க மாட்டார் என்று கருணாநிதி கூறியதாகத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.
இதைக் கேட்டுக் காங்கிரசைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். சுவிஸ் வங்கியில் பணம்போட்டு வைத்துள்ளார் காமராஜர் என்று திமுகவினர் பரப்பிய கட்டுக்கதைகளால்தான் காமராஜர் வீழ்த்தப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவினரின் கட்டுக்கதைகளுக்குச் சரியான பதிலடி தராமல் இருந்தால் காமராஜரின் ஆன்மா நம்மை மன்னிக்காது என்றும் கூறியுள்ளார். காமராஜர் பெயரால் தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் இன்றும் நிற்பதாக ஜோதி மணி குறிப்பிட்டுள்ளார்.
ஏசி அறை இல்லாமல் காமராஜர் உறங்க மாட்டார் எனத் திருச்சி சிவா சொல்வது உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டுள்ள ஜோதிமணி, வெளியூர் சென்றால் அரசினர் விடுதியில் தங்கும் காமராஜர் வெயில் காலத்தில் புழுக்கம் அதிகமாக இருந்தால் அங்குள்ள மத்தடியில் படுத்து உறங்கியவர் என்றும் கூறித் திருச்சி சிவாவுக்கும் கட்டுக்கதை கட்டுவதில் வல்லவரான திமுகவினருக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.



