
திமுகவுக்கும், தவெக-வுக்கும் நான் தான் போட்டி என கூறும் விஜய் அய்யோ பாவம் என்றும் இதற்கு மேல் என்ன சொல்ல முடியும் இதுவரை எந்த தேர்தலிலும் தம்பி விஜய் போட்டியிடவில்லை என நயினார் நாகேந்திரன் விஜய்யை விமர்சனம் செய்தார்.
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் யாத்திரையை நயினார் நாகேந்திரன் மேற்கொண்டார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2002-ல் இறந்து போனவர்கள் அனைவரும் உயிரோடு உள்ளனர். அதைத்தான் இன்றைக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனால்தான் ஆளுங்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பதாகவும், இறந்து போனவர்கள், இடமாறி போனவர்களை மட்டுமே நீக்கி உள்ளதாகவும், உயிரோடு உள்ளவர்கள் நீக்கப்படவில்லை. திமுகவினர் ஏற்கனவே கள்ள ஓட்டை சேர்த்து வைத்துள்ளனர் அதைத்தான் தற்போது நீக்கியுள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் திமுக ஏன் பயப்பட வேண்டும், ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்.
அதுதான் எங்களின் கேள்வி. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இறந்து போனவர்களை நீக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களை சேர்க்க வேண்டும். இடம் மாறி சென்றவர்களை வேறு இடங்களில் சேர்க்க வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது. இதனை ஊடகங்கள் யாரும் முதல்வரிடம் கேட்பதில்லை என தெரிவித்தார்.
முதல்வர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் , ஒரு லட்சம் பேர் தப்பான வாக்கு செலுத்தி முதல்வர் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். விஜய் திமுகவுக்கும், தவெக-வுக்கும் நான் போட்டி என பேசியுள்ளார் என்ற கேள்விக்கு.
ஐயோ பாவம் என பதிலளித்தார். இதற்கு மேல் என்ன சொல்ல முடியும். இதுவரை எந்த தேர்தலிலும் தம்பி (விஜய்) போட்டியிடவில்லை. அண்ணன் ஒருவர் (செங்கோட்டையன்) சேர்ந்துள்ளார்.
அவர் சேர்ந்ததால் அம்மாவுடன் இருந்துது போல் நினைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருக்கிறார். அண்ணன் செங்கோட்டையன் பாவம் அவருக்கு வேறு வழி இல்லை என தெரிவித்தார். திமுக என்றைக்கும் மக்கள் செல்வாக்கை பெற்று வெற்றி பெற்றதில்லை, 1967க்கு பிறகு. 1972-ல் எம்.ஜி ஆர் கட்சி ஆரம்பித்தார்.
எம்ஜிஆர் உயிரோடு உள்ளவரை எம்.ஜி.ஆர் தான் முதல்வர். எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்தது அதனால் திமுக ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு ஜெயலலிதா, ஜானகி இரு அணிகளை கூட்டினால் 90 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று இருப்பார்கள். சேர்ந்து இருந்தால் ஆட்சியை பிடித்திருக்கலாம்.
1989 மதுரை கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல்வர் கருணாநிதி. அந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவில்லை. அன்றைக்கு 26 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. கடந்த முறை சிறிய கணக்கு தவறியதால் திமுக ஆட்சிக்கு வந்தது. 50 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்து வைத்துள்ளனர்.
ஊடகங்களையும் தங்கள் கையில் வைத்துக் கொண்டு இப்படியான கேள்விகளை கேட்க வைப்பதாக தெரிவித்தார்.


