
கன்னியாகுமரியில், கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் என்பவர், தனியார் பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு சென்றுவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த சந்துரு என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும், விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் பகுதிநேரமாக ஓட்டும் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால், மாணவர் விஷ்ணுபரத்தை குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார், தப்பி ஓடிய சந்துருவை தேடிவந்த நிலையில், அவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த விவரம் தெரிய வந்தது. இதையடுத்து, சந்துருவை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


