
பிரதமர் நரேந்திர மோடி அரசியலுக்கு வந்து 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அப்போதைய ஆளுநர் சுந்தர் சிங் பண்டாரி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
அரசின் தலைவராகப் பொதுவாழ்வில் 25ஆம் ஆண்டில் தான் அடியெடுத்து வைப்பதாகவும், அதற்குத் தொடர்ந்து தன்னை வாழ்த்தும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் பொதுவாழ்க்கைக்கு வந்தது மக்களின் வாழ்நிலையை உயர்த்தவும், நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கவும் ஏதுவாக இருந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் பருவநிலை மாற்றத் துறையை உருவாக்கி நீடித்த தீர்வுகளை உருவாக்கியது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுகட்டமைத்தது, வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியது நரேந்திர மோடியின் சாதனைகளாகும்.
பிரதமராக உள்ள பதினோராண்டுக் காலத்தில் சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்தியது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தைச் செயல்படுத்தியது, 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு வெளியே கொண்டுவந்தது ஆகியன நரேந்திர மோடியின் சாதனைகளாகும்.
