
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸை ‘டால்பின் அன்புமணி’ என விமர்சித்து, விவசாயிகளின் துயரங்கள் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. இனி வருங்காலங்களில் உண்மையினை ஆராய்ந்து அறிக்கை விடுவது இவருக்கும் நல்லது, கூட்டணிக்கும் நல்லது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உழவர்கள் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறதா? என்ற கேள்வியுடன் ஒரு விளம்பரம் தேடும் உண்மைக்கு புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ள சொந்த கட்சியிலிருந்து அடித்து விரட்டப்பட்ட அன்புமணி அவர்கள் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவர்.
பழைய அறிக்கைகளை தொகுத்து ஒன்றும் தெரியாமல், விவரம் அறியாமல் அன்றாடம் அறிக்கை விடுவதும், நகர வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டு விவசாயத்தின் அருமை, பெருமைகள் தெரியாமல், வயல்வெளியில் நடக்காமல், வயலில் அண்டைவெட்டுவது என்னவென்று தெரியாமல் அவர் வீட்டு ஜன்னலில் இருந்து கடற்கரையில் டால்பின்கள் விளையாட்டை கண்டு மகிழ்ந்து அறிக்கைவிடும் “டால்பின் அன்புமணி” அவர்களுக்கு விவசாயிகளின் துயர் என்னவென்று ஒன்றும் தெரியாதவர்.
ஒவ்வொரு முறையும் விவசாய சங்கத் தலைவர்கள் , திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்டும் போதெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் தான் சேர்ந்திருக்கும் புதிய கூட்டணியின் எஜமானர்களை திருப்திபடுத்தும் நோக்குடன் வெற்று அறிக்கை அன்புமணி தனது கூட்டணி விசுவாசத்தை காட்டிட, தமிழக மக்களை குழப்பும் விதமாக, எடப்பாடியின் ஊதுகுழலாக இருந்து கொண்டு இவ்வரசை குறை சொல்வதையே நோக்கமாக கொண்டு குழப்பமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், டால்பின் அன்புமணி அவர்கள் தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சி குறித்து, சிறிதும் புரிதல் இல்லாமல் தவறான தகவல்களை சமீபகாலங்களில் வெளியிட்டு வருகிறார்.அதாவது ரூபாய் மதிப்பில் 2011-12ஆம் ஆண்டில், ரூ.50,31,026 இலட்சம் ஆக இருந்த நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி. 2024-25ஆம் ஆண்டில் ரூ.51,86,276 இலட்சம் ஆக உயர்ந்துள்ளது. இந்த விவரங்கள் யாவும் இவர் கூட்டணி சேர்ந்திருக்கும் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே என்பது உண்மை.
கடந்த 2011 முதல் 2021 வரை நடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டு விவசாயிகள் இடர்பாடுடனே தங்களது வாழ்க்கையினை சிரமத்துடன் நடத்தி வந்தனர். அதிமுக ஆட்சியில் போராட்ட வாழ்க்கையுடன் அதிகளவில் விவசாயிகளின் தற்கொலைகளும் நிகழ்ந்தது. இதுபற்றி ஒன்றும் அறியாத வெற்று அறிக்கை அன்புமணி கடந்த 4 ஆண்டுகளில் (2021-22 முதல் 2024-25 வரை) இயற்கை பேரிடர்களால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் 13.29 இலட்சம் பரப்பில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.1,631.53 கோடி நிவாரணத் தொகையாக 20.84 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் ஆண்டில், வடகிழக்கு பருவமழை 2025 டித்வா புயலால் 56,226 எக்டரில் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் வழங்குவதற்கான ஆணை இன்றே பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் ஏற்பட்ட அனைத்து இயற்கை இடர்பாடுகளுக்கும், திராவிட மாடல் நாயகன் பாதிப்பு ஏற்பட்ட உடனே நேரடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தினை அறிந்து, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கும் இவ்வரசினை குற்றம் சுமத்துவது சரியல்ல.
அதேபோல், அவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கற்பனையும், ஃபேண்டசியும் கலந்து டால்பின் அன்புமணிக்கு என்னவென்று தெரியாமல் தவறான அறிக்கையினை எழுதிகொடுக்கும் எஜமானர்களை திருப்திபடுத்துவதுதான் இவருடைய வாடிக்கையாக உள்ளது. இனிவருங்காலங்களில் உண்மையினை ஆராய்ந்து அறிக்கை விடுவது இவருக்கும் நல்லது, இவர் வகிக்கும் கூட்டணிக்கும் நல்லது என தெரிவித்துள்ளார்.



