
மேலூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி, விவசாயம் செழித்து மக்கள் நோய்நொடியின்றி வாழ வேண்டி மக்கள் புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியில் உள்ள ஸ்ரீபொன் அய்யனார் கோவில் கார்த்திகை மாத புரவி எடுப்பு திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறும்.
இதனையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை மங்களாம்பட்டியில் தயார் செய்யப்பட்ட குதிரை சிலைகள், அலங்கம்பட்டியில் உள்ள குதிரை பொட்டலுக்கு எடுத்து வரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று கோவில் குதிரை சிலை (புரவி) மற்றும் நேர்த்திக்கடன் குதிரை சிலைகளுக்கு கண் திறந்து வழிபாடு செய்யப்பட்டு. ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஶ்ரீபொன் அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு. பக்தர்கள் பொங்கல் வைத்து கோவிலில் வழிபாடு செய்தனர்.
மழை பெய்து விவசாயம் செழித்து, மக்கள் நோய்நொடியின்றி வாழ வேண்டி நடைபெறும் இத்திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி (புரவி) எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


