Mallikarjun Kharge: திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு!

Advertisements

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர் மட்டக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது.

பின்னர், பொது மக்கள், அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்தின் கருத்துகளைக் கேட்க ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு முடிவு செய்தது. அதன்படி, தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆறு தேசிய கட்சிகள், 33 மாநில கட்சிகள் மற்றும் 7 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உயர் மட்டக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “குழுவின் பரிந்துரைகளால் எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநில அரசுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு, கணிசமான பிரதிநிதித்துவம் வழங்காமல், ஒரே நாடு ஒரே தேர்தல்குறித்த உயர்மட்டக் குழுவின் அமைப்பு மிகவும் ஒரு சார்புடையதாகத் தெரிகிறது என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவரே இருக்கும் போதிலும், அந்தக் குழுவின் ஆலோசனைகள் பாவனை காட்டும் விதமாகவே இருக்கக்கூடும் எனச் சாதாரண வாக்காளர்கள் கூட எண்ணுவது வேதனை அளிக்கிறது. ஏன் என்றால், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தத் திட்டத்துக்கு ஆதரவான உறுதியான கருத்துக்கள் ஏற்கனவே பொதுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதன் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக உண்மையான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

உண்மையில் இந்தக் குழுவின் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராகப் பதவி வகிக்கும்போது, 2018ஆம் ஆண்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போது, அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவது வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். உங்கள் கடிதமும் அதே கருத்தை மீண்டும் முன்வைக்கிறது.

ஆனால், ஆட்சியைவிடத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாலே வளர்ச்சி பணிகளும், நிர்வாகமும் அடிக்கடி ஸ்தம்பிக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *