
திருப்பரங்குன்றத்தின் உச்சியில் தீபம் ஏற்ற அனுமதித்ததை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், குன்றத்தில் தீபம் ஏற்றுவதால் மதநல்லிணக்கம் பாதிக்கப்படுமா? என்றும், ஒரு மதத்தினரின் நம்பிக்கையைத் தடுப்பது எப்படி மத நல்லிணக்கம் ஆகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தின் உச்சியில் உள்ள தூணில் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரி இராம ரவிக்குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் திருக்கார்த்திகை நாளில் குன்றத்தின் உச்சியில் தீபம் ஏற்றுவது தமிழர் மரபு என்றும், திருப்பரங்குன்றத்தின் உச்சியில் தீபம் ஏற்றும் நடைமுறைக்கு நூறாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தின் உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளித்தார். மனுதாரர் பத்துப்பேரை அழைத்துக்கொண்டு மத்தியத் தொழில்பாதுகாப்புப் படையினருடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.
இதையடுத்து இராம ரவிக்குமாரும் மற்ற மனுதாரர்களும் இந்து அமைப்பினரும் மத்தியத் தொழில்பாதுகாப்புப் படை வீரர்களுடன் திருப்பரங்குன்றத்துக்குச் சென்றனர்.
அவர்கள் குன்றத்தின் உச்சிக்குச் செல்ல முயன்றபோது தமிழ்நாடு காவல்துறையினர் தடுப்புக் கம்பிகளை வைத்து மறைத்து அனுமதி மறுத்தனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு இந்து இயக்கத்தினர் செல்ல முயன்றனர். இதையடுத்துக் குன்றத்துக்குச் செல்ல மதுரை மாநகரக் காவல் ஆணையர் தடை விதித்துள்ளதாகக் கூறி அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் பாதுகாப்புக்கு வந்த தொழிற்பாதுகாப்புப் படையினர் காவல்துறையினருடன் பேச்சு நடத்தினர்.
தீபம் ஏற்றவும் அதற்குப் பாதுகாப்பு வழங்கவும் தங்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளதாகத் தொழில் காப்புப் படையினர் கூறியதைக் காவல்துறையினர் ஏற்கவில்லை. தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரனிடம் மேல்முறையீடு செய்து அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரினர்.
அந்த வழக்கு இன்று அவசர வழக்காக விவாரிக்கப்பட்டது. அப்போது, பத்துப் பேர் தீபம் ஏற்றச் செல்லலாம் என்ற உத்தரவுக்கு மாறாக ஒரு கூட்டமே வந்ததாகவும், இதனால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. தீபம் ஏற்றவிடாமல் தடுத்து வன்முறைச் சூழலை உருவாக்கியது தமிழகக் காவல்துறைதான் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது, குன்றத்தின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றினால் மத நல்லிணக்கம் எவ்வாறு பாதிக்கப்படும்? என்றும், ஒரு மதத்தினரின் நம்பிக்கையைத் தடுப்பது எப்படி மத நல்லிணக்கம் ஆகும்? என்றும் நீதிபதிகள் வினவினர். இதையடுத்து இந்த வழக்கில் இன்றே தீர்ப்பளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.



