
சேலம்: சேலம் கடைவீதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், திருவண்ணாமலை மார்க்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்தனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காகப் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பல இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாகச் சேலத்தில் கடைவீதிகளில் முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபயணமாக வந்து ஓட்டு சேகரித்தார். இந்த நிலையில், இன்று (ஏப்.,3) காலையில் சேலம் கடைவீதிகளில் காய்கறி வியாபாரிகளிடம் அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ் ஓட்டு சேகரித்தார்.
அதேபோல், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் செல்லும் பாதை அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து நடைபயணமாகச் சென்று ஓட்டு சேகரித்தார். மாடவீதி கள்ளக்கடை பகுதியிலிருந்து காந்தி சிலைவரை நடந்து சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்த ஸ்டாலின், அந்த வழியாகச் சென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் உரையாடி செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர், அங்கிருக்கும் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார்.

