
திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி பஜாரில் பேருந்திற்காகக் காத்திருந்து தேர்வுக்குச் செல்ல முடியாமல் தவித்த கல்லூரி மாணவிகளை அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சொந்த செலவில் வாகனம் ஏற்படுத்திக் கொடுத்துக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி இன்று திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வியாபாரிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் நடந்து சென்று வாக்குகளைச் சேகரித்தார். அதனைத் தொடர்ந்து பரமன்குறிச்சி பஜாரில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் பேருந்திற்காகக் காத்திருந்தனர். அவர்களிடம் வாக்கு சேகரித்தபோது ஒரு மணி நேரமாகப் பேருந்துக்குக் காத்திருப்பதாகவும், போதிய பேருந்துகள், மற்றும் மகளிர் இலவச பேருந்துகள் இல்லாததால் தேர்வு நேரத்தில் தவித்து வருவதாகவும் சாத்தான்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிகளுக்கு உடனடியாகச் சொந்த செலவில் வேன் ஒன்று ஏற்படுத்திக் கொடுத்து மாணவிகளைக் கல்லூரிக்குச் செல்ல அனுப்பி வைத்தார். மேலும் வெற்றி பெற்றால் இந்தப் பகுதியில் பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.


