
கோவை: ‛‛ தமிழகத்தில் எந்த நகரையாவது தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் முதல்வர் ‛ரோடு ஷோ’ நடத்தட்டும்” எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் அரசியல் நடத்துகிறார். சின்னம் கிடைக்காததால், தொண்டர்கள் அவர்மீது கோபத்தில் உள்ளனர். தன்னுடைய தவறை மறைப்பதற்காகத் தினமும் என்னையும், பா.ஜ., வையும் சீமான் விமர்சிக்கிறார். அவர் செய்த தவறுக்காகத் தினமும் எங்கள்மீது பழிபோட்டால் எப்படி
முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி தமிழகத்தை எட்டி பார்க்கிறார். கடந்த 3 வருடங்களில் ஸ்பெயின், சிங்கப்பூர், துபாய், ஜப்பான் சென்றார். இதனால், எந்தப் பயனும் இல்லை. முதல்வர் களத்திற்கு வராததால், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கொள்ளையடிப்பதையே முழுநேர பணியாக வைத்துள்ளனர். வீதிக்கு வந்தால் தான், மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது முதல்வருக்குத் தெரியும்.
‛ ரோடு ஷோ’ வை முதல்வர் நடத்தட்டும். தமிழகத்தில் எந்த நகரையாவது முதல்வர் தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் ரோடு ஷோ நடத்தட்டும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பார்ப்போம். நான் சவால் விடுக்கிறேன். ரோடு ஷோ நடத்த முதல்வருக்குப் பயம் ஏன்.
பிரதமர் ரோடு ஷோ நடத்தி உள்ளார். அமித்ஷா தேனியில் நடத்துகிறார். முக்கிய நகரில் பிரதமர் மீண்டும் ரோடு ஷோ நடத்த உள்ளார். அதனை ஏன் முதல்வர் செய்யவில்லை. மாய உலகத்திற்குள் அவர் கட்டிய கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு பிரதமரை அவர் விமர்சிக்கிறார். பிரதமர் உழைப்பை பாருங்கள். முதல்வர் உழைப்பை பாருங்கள் மக்களே முடிவு செய்யட்டும் யார் மக்களுக்காக உழைப்பது யாரெனத் தெரியும்.
2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தி.மு.க., வினர் ‛ வேல்’ ஐ தூக்கினர். இதனால் கடைகளில் வேல் இல்லை. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோர் ‛வேல்’ ஐ தூக்கினர். இன்று ராஜா சனாதன தர்மம், நான் ராம பக்தன், அயோ்தி சென்றேன் என்கிறார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய வியாதி மறதி. இந்த முறை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
சனாதன தர்மத்தை எதிர்த்தால் தினமும் எதிருங்கள். தேர்தலுக்கு முன் எதிர்க்கிறீர்கள். தேர்தலின்போது நெற்றியில் பட்டை போடுகிறீர்கள். தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கிறீர்கள். பிரதமரின் தமிழக வருகை உறுதியாகவில்லை. உறுதியான உடன் சொல்கிறோம்.
கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்தபிறகு மக்களிடம் உண்மை தெரிந்துவிட்டது. கச்சத்தீவு பற்றி முதல்வர் ஒவ்வொரு மேடையிலும் பேசினார். நாங்கள் மக்களிடம் உண்மையைச் சொன்னபிறகு திமுக., வினர் ஏன் பதறுகின்றனர்?. எங்களுடைய கடமையைச் செய்துள்ளோம். மக்கள் வரவேற்கின்றனர். மீனவ நண்பர்களுக்கு 50 ஆண்டுக்குப் பிறகு உண்மை தெரிந்துள்ளது.
வாரிசு அரசியல்வாதிகளிடையே கொச்சையாகப் பேசுவதில் போட்டி நடக்கிறது. இந்திய அளவில் கொச்சையாகப் பேசுவதில் உதயநிதி முதலிடத்தில் வருகிறார். அருவருக்கத் தக்க வகையில் பெண்கள், தாய்மார்கள்பற்றித் தொடர்ந்து பேசி வருகிறார்.ஒரு அறையில் நண்பர்களுடன் பேசுவதை பொது வெளியில் பேசுகிறார். அவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்ததை சிதம்பரத்திற்கு தெரியும். பொது வெளியில் இருப்பதால் தான் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு தொடர்பான தகவலைப் பெற முடிந்தது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


