நிதி ஒழுங்குபடுத்தும் சட்ட திருத்தத்திற்கு பினராயி விஜயன் எதிர்ப்பு..!

வெளிநாட்டில் இருந்து நிதி வருவதை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், வெளிநாட்டு நிதி வருவதை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயல்வது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏழைகள், விளிம்புநிலை மக்களுக்குச் சமூகப் பணியாற்றும் நிறுவனங்களையும், அவற்றின் சுதந்திரமான செயல்பாட்டையும் இது கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். சமூகத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்குக் கல்வி, நலவாழ்வு, நிவாரணப் பணி ஆகியன கிடைப்பதை இந்தச் சட்டத் திருத்தம் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மதச் சிறுபான்மைச் சமூகத்தினரையும் இந்தச் சட்டத் திருத்தம் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்பட்டோரின் குரலை நெரிக்கவும், அவர்களின் சமூகச் செயல்பாட்டைக் கட்டுப்பத்தவும் இதை மத்திய அரசு முன்னெடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்தச் சட்டத் திருத்தம் ஜனநாயககத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்று கூறியுள்ள பினராயி விஜயன், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *