Kulasai Mutharamman: ஓம் காளி, ஜெய் காளி  கோஷத்துடன் மஹிசாசூரனை வதம் செய்த அம்மன்!

Advertisements

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் நடைபெற்றது.  பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் காளி ஜெய் காளி என்ற கோசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்ததாக, குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற தசரா திருவிழாவில் தினமும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள்  மகிஷா சூரசம்ஹாரம்  நேற்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெற்றது.


இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாகச் சென்று பெற்ற காணிக்கையை கோவில் உண்டியலில்  செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளிக் கடற்கரை வந்தார். முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதம் செய்தார். தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூயனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மஹிசாசூரனையும் வதம் செய்தார். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். கோவில் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.


இதையடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 30 இடங்களில் 70 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். பக்தர்கள் வசதிக்காகச் சுமார் சிறப்பு 200 பேருந்துகள் இயக்கப்பட்டது.

11ம் நாளான இன்று  காலைப் பூஞ்சப்பரத்தில்  அம்மன் எழுந்தருளி  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  தொடர்ந்து மாலை 4 மணிக்கு  அம்மன் கோவில் வந்து சேர்கிறார்.  தொடர்ந்து 4.30 மணியளவில்  அம்மனுக்கு காப்பு களையப்பட்ட உடன்,  வேடம் அணிந்த பக்தர்களுக்குக் காப்பு களையப்படுகிறது.  இறுதியாக நள்ளிரவு 12 மணிக்குச் சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான நாளைப் பகல் 12 மணிக்குச் சிறப்பு பாலாபிஷேகம், புஷப அலங்காரம் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *