
குஷ்புவின் உருவ பொம்மையை எரித்துச் செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைத் தளத்தில் குஷ்புவுக்கு எதிராகப் பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.
ஆனால் ‘சேரி’ என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள் நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்துவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்குச் செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அந்த ரோட்டில் யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். இன்று காலை 10 மணிக்கே அந்த ரோட்டில் காங்கிரசார் திரண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குஷ்புவின் உருவ பொம்மையையும் எரித்தனர். செருப்பு மற்றும் துடைப்பத்தாலும் அடித்தார்கள்.பின்னர்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தையொட்டி பா.ஜனதா செயலாளர் கராத்தே தியாகராஜன் குஷ்பு வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், காங்கிரசார் மிகவும் அநாகரீகமாக நடந்துள்ளனர். குஷ்பு வழக்குகளைச் சட்டப்படி சந்திப்பார் என்றார்.


