கேரளத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி திருவனந்தபுரம் மேயராகிறார். இவர் யார்? எப்படி அரசியலில் குதித்தார்? என்று இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி அரசியலுக்குள் நுழைந்தவர். இவரது, பாணியைப் பின்பற்றி அரசியலுக்குள் நுழைந்தவர்தான் கேரளத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலேகா. 1987ஆம் ஆண்டு இவர், தனது 26ஆம் வயதில் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார்.
2017ஆம் ஆண்டு கேரள டி.ஜி.பியாகவும் பொறுப்பேற்றார். இப்படிப் பல்வேறு சாதனைகளைப் படைத்த ஸ்ரீலேகாவைத் திருவனந்தவுரம் மேயராக நியமிக்கப் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளளது. இரு நாட்களுக்கு முன்பு கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன்முறையாகப் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது. இந்த நகரிலுள்ள 100 வார்டுகளில் 50 வார்டுகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநகராட்சியைக் கடந்த 45 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகக் கைப்பற்றி வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.
ஆனால், இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணிக்கு 29 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைத்துள்ளன. மற்ற வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இப்போது, திருவனந்தபுரம் மேயர் பதவிக்குப் பெயர் அடிபடும் ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் வார்டில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் மாகநராட்சியை மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ளது. இந்தத் தோல்விக்கு முன்னாள் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீதுள்ள அதிருப்தி முக்கியக் காரணமென்று கூறப்படுகிறது. தனது 21 வயதில் நாட்டின் முதல் இளம் பெண் மேயர் என்ற பெருமையுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்றவர் ஆர்யா ராஜேந்திரன். மேயராக இருக்கும்போதுதான், இவரின் திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ. வாக உள்ளார்.
ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராக இருந்தபோது, ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவின் போது கூட ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விழா முடிந்ததும், குப்பைகளை அள்ள 21 லாரிகளுக்கு வாடகை கொடுக்கப்பட்டது. துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாகச் சொல்லப்பட்டது. இது தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஒன்று தனது காருக்கு வழிவிடாமல் சென்றதாகக் கூறி ஆர்யா ராஜேந்திரன் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். அதே வேளையில், ஜாமீனில் வெளி வந்த டிரைவர் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி மேயர் மீது போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆர்யா, அவரின் கணவர் சச்சின்தேவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து, பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டுமென்று கூட, மேயருக்குத் தெரியவில்லை’ என்று உள்கட்சிக் கூட்டத்தில் ஆர்யாவின் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேயரை மாற்ற வேண்டுமென்றும் பரவலாகக் கோரிக்கையும் எழுந்தது. ஆனால், மேயர் ஆர்யாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பெருந்தலைகளின் ஆதரவு இருந்ததால், தொடர்ந்து திருவனந்தபுரம் மேயராக இருந்து வந்தார். ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆர்யா ராஜேந்திரனைப் பிரசாரம் செய்ய மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்கவில்லை.
இவரைப் பார்த்தால் பொதுமக்களின் கோபம் வேறுவிதமாகத் திரும்பும் என்பதாலேயே, பிரசாரம் செய்ய வேண்டாமென ஆர்யாவுக்குக் கட்சித் தலைமை உத்தரவிட்டு விட்டது. எனினும், மக்கள் மறக்காததால், அதற்கான விலையை மார்க்சிஸ்ட் கட்சி கொடுத்துள்ளது. ஒருவேளை, ஆர்யாவை மேயர் பதவியில் இருந்து நீக்கியிருந்தால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக மாறியிருக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது, திருவனந்தபுரம் மேயராக நியமிக்கப்படவுள்ள ஸ்ரீலேகா பன்முகத் திறமை படைத்தவர். 16 வயதில் தந்தையை இழந்த அவர் திருவனந்தபுரம் காட்டன் ஹில் பள்ளியில் படித்தார். படிப்பு மட்டுமல்லாமல் என்.சி.சி., என்.எஸ்.எஸ் ஆகியவற்றிலும் இருந்தார். கவிதைகள் எழுதுவது, நாடகங்கள் இயற்றுவது எனப் பல திறமைகளைக் கொண்டுள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலையில் எம்.பி.ஏ படித்தார்.
கல்லூரிப் பேராசிரியையாகப் பணியைத் தொடங்கிய அவர், 1987ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ் ஆனார். அதே ஆண்டில், திருச்சூர் ஏ.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1991ஆம் ஆண்டு திருச்சூர் எஸ்.பி ஆனார். தொடர்ந்து, போலீஸ் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த ஸ்ரீலேகா, சி.பி.ஐயிலும் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் அச்சமென்பதே அறியாமல் பல்வேறு ரெய்டுகளை மேற்கொண்டார். இதனால், ரெய்டு ஸ்ரீலேகா என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு.
எழுத்திலும் ஆர்வம் கொண்ட ஸ்ரீலேகா 10 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். 2020ஆம் ஆண்டு கேரள டி.ஜி.பி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அப்போது, பிரதமர் மோடிதான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் ஸ்ரீலேகா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது கணவர் டாக்டர் சேதுநாத். இந்தத் தம்பதிக்குக் கோகுல்நாத் என்ற மகனும் உண்டு.
தனது வெற்றி குறித்து ஸ்ரீலேகா கூறியதாவது, என்னைச் சாஸ்தாமங்கலம் வார்டுக்கு வேட்பாளராக அறிவித்ததும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. எல்லை மீறிய அவர்களின் விமர்சனங்களை மக்கள் புறந்தள்ளி விட்டனர். சாஸ்தாமங்கலத்தில் எந்த வேட்பாளரையும் விட, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். 33 ஆண்டுகள் போலீஸ் துறையில் பணியாற்றியிருந்துள்ளேன்.
அப்போதெல்லாம், அரசியலில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் துளியும் இருந்ததில்லை. இதனால், எனது பணிக் காலத்தில் யாருக்கும் பயப்படாமல் நான் கடமையாற்றியுள்ளேன். அதே போன்றே, இப்போதும் மக்கள் பணியாற்றப் போகிறேன் என்கிறார். இப்போது ஸ்ரீலேகாவுக்கு 64 வயதாகிறது. திருவனந்தபுரம் மேயரானால் கேரளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முதல் மேயர் என்ற பெருமையையும் இவர் பெறுவார்.