
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், நெருக்கடி நிலைக் காலத்தில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயப் பிரகாஷ் நாராயணன் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து அவர் ஜனநாயகத்தின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை தெரிய வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் மீது அறையப்படும் ஒவ்வொரு ஆணியும் தன் நெஞ்சில் அறையப்படுவது போன்றது என்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதியுள்ளதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷா வெளியிட்டுள்ள செய்தியில், சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், நீதி ஆகியவற்றின் மூலம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தியவர் ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்று குறிப்பிட்டுள்ளார். நெருக்கடி நிலைக் காலத்தில் போராட்டங்கள், துன்புறுத்தல்களுக்கு இடையே ஜனநாயகத்தின் விழுமியங்களைக் காத்து நாட்டுக்கு வலிமையூட்டியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதின் கட்கரி வெளியிட்டுள்ள செய்தியில் ஒட்டுமொத்தப் புரட்சி இயக்கத்தின் முன்னோடியான லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளையொட்டி அவருக்குத் தலைவணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் நலனுக்காகத் தன் வாழ்நாளையே ஒப்படைத்தவர் என்றும், நெருக்கடி நிலைக் காலத்தில் அநீதிக்கு எதிராக வலிமையாகக் குரல்கொடுத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
