
ஜல்லிக்கட்டு விழா என்பது நாட்டின் சொத்து, இதனை திமுகவின் குடும்ப விழாவாகக் கொண்டாடி வருகின்றனர் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொங்கல் விழா அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். தொடர்ந்து, ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மலர வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி மன்னராட்சி முதல் தற்போது மக்களாட்சி வரை மக்கள் ஜல்லிக்கட்டாக நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது உதயநிதிக்காக ஜல்லிக்கட்டா?ஸ்டாலினுக்காக ஜல்லிக்கட்டா? என்றக் கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணி வரை தொடங்கப்பட வேண்டும். ஆனால் 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்றும், உதயநிதிக்காக வேடிக்கை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறார்கள் என்றும் கூறினார்.
மேலும், ஜல்லிக்கட்டு விழா என்பது நாட்டின் சொத்து, இதனை திமுகவின் குடும்ப விழாவாகக் கொண்டாடி வருகின்றனர் என குற்றம்சாட்டினார். இதில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், கணேசன், ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.



