
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதலை இரு நாடுகளும் நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு நேற்று நிறைவடைந்தது. கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றனர்.
அதேவேளையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் தொடங்கும் முன், அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு 60 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது எனவும், ஆனால், அந்த ஒப்பந்ததை மேற்கொள்ள ஈரான் தவறிவிட்டது எனவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து பேசிய பிரிட்டன் பிரதமர் கியர்ஸ்டார்மர், மோதலைத் தணிக்க வேண்டும் என்பதில், ஜி7 தலைவர்களின் கவனம் உள்ளதாக தெரிவித்தார்.



