
இந்திய கடற்படை நாளையொட்டிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் டிசம்பர் 4, 5 ஆகிய நாட்களில் இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தைத் தாக்கியது. இந்தத் தாக்குதல் அந்தப் போரின் வெற்றிக்குக் குறிப்பிடத் தக்க பங்களிப்பாக இருந்தது.
இதையடுத்து 1972ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரம் கடற்படை வாரமாகவும், டிசம்பர் நான்காம் நாள் கடற்படை நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கடற்படை நாளையொட்டிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், கடற்படையினருக்கும், முன்னாள் கடற்படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நமது கடல் எல்லையையும் நாட்டு நலனையும் துணிச்சலுடனும் விழிப்புடனும் காக்கும் வீரர்களுக்கு நாடே தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான வணிக வழித்தடங்களுக்கும், கடல்சார் பொருளாதாரத்துக்கும் இந்திய கடற்படை பொறுப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், கடற்படையின் அதிகாரிகள், வீரர்கள், மாலுமிகள் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மாபெரும் துணிச்சலின் மறுபெயராக இந்திய கடற்படை விளங்குவதாகவும், அவர்கள் நமது கடலோரப் பகுதிகளுக்கும், கடல்சார் நலன்களுக்கும் பாதுகாப்பாக விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலத்தில் நமது கடற்படை தற்சார்பு, நவீனப்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும், இது நமது பாதுகாப்பை மேலும் விரிவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடியதை எப்போதும் மறக்க முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோலப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கடற்படை நாளையொட்டி வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய கடற்படையாக இந்திய கடற்படை விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



