Indian Military Soldier: கண்பார்வை இழந்தாலும் மன உறுதியை இழக்காத ராணுவ வீரர்!

Advertisements

எல்லையில் நடந்த சண்டையின் போது, கண்பார்வை இழந்தாலும், துப்பாக்கி சுடுதல் மற்றும் சியாச்சின் பனிப்பாறையில் ஏறுவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளில் தேசிய பதக்கங்களை வென்று உத்வேகமாக மாறியுள்ளார் லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ்.

இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ், பல ஆண்டுகளுக்கு முன்பு எல்லையில் நடந்த சண்டையின் போது, தனது கண் பார்வையை இழந்தவர். ஆனால், தற்போது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் சிறந்து விளங்குகிறார். சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு துவண்டு போகாமல் தன்னம்பிக்கையோடு விளங்கும் ராணுவ வீரர் துவாரகேஷ், பல சாதானைகளை செய்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளதுடன், விருதுகளையும் வென்று குவித்துள்ளார்.

நமது ஏசியாநெட் நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ், “நான் ஒரு சிப்பாய்; நான் எப்போதும் சிப்பாயாக இருப்பேன், நீங்கள் ஒன்றை ஏற்றுக் கொள்ளாத வரை உங்களுக்கு தோல்வி இல்லை.” என தனது மன உறுதியை வெளிப்படுத்தினார்.

அன்றாட பணிகளை செய்வதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி அன்றாடம் பல்வேறு விஷயங்களை செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

போரில் படுகாயமடைந்து மாற்றுதிறனாளிகளான ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து பார ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு தயார் செய்யும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்திய ராணுவ பாராலிம்பிக் மையத்தில் பயிற்சி பெற்ற அவர். தொழில்நுட்பத்தை தனது அன்றாட வழக்கத்தில் தங்கு தடையின்றி பயன்படுத்தி வருகிறார்.

லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷின் சாதனைகளை கவுரவப்படுத்தும் விதமாக, டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கு சிறப்பி விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நாட்டின் ராணுவ வலிமை மற்றும் வளமான கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் குடியரசு தின அணிவகுப்புக்கு அவர் அழைக்கப்பட்டது, அவரது அர்ப்பணிப்பு உணர்வைக் குறிக்கிறது.

“நான் எனது கண் பார்வையைத்தான் இழந்துவிட்டேன், வாழ்க்கைக்கான எனது பார்வையை அல்ல” என 35 வயதான நம்பிக்கையுடன் கூறுகிறார் லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ். துப்பாக்கி சுடுவதில் தேசிய பதக்கங்களை வென்றது மட்டுமல்லாமல், சியாச்சின் பனிப்பாறையில் ஏறும் கடினமான சாதனையையும் அவர் செய்துள்ளார். ஏசியாநெட்டுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தனது உந்துதலுக்கு காரணமான பிரதமர் மோடிக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தைரியம், விடாமுயற்சியின் வடிவமாக இருக்கும் லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ், சாதிக்க துடிக்கும் பலருக்கும் உத்வேகமாக இருந்து வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *