எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டல்: பெங்களூரு கூட்டத்தில் அறிவிப்பு!

Advertisements

பெங்களூரு: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக புதிய பெயர்களை பரிந்துரைக்க திங்கள்கிழமை நடந்த இரவு விருந்தில் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடந்த 4 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம்: I – Indian, N – National, D – Democratic, I – Inclusive, A – Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி.

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்துக்குப் பின்னர் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இது, நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றுதற்கான மிகவும் முக்கியமான ஒரு கூட்டம். நாட்டின் நலன் கருதி நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றிணைந்துள்ளோம்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பல்வேறு விவகாரங்களை விவாதித்து ஒருமித்த குரலில் தீர்மானங்களை ஆதரித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கூட்டணிக்கு இந்தப் பெயரை வைக்க ஒப்புக்கொண்டனர். முதலில் எங்களுடைய கூட்டணி யுபிஏ (UPA) ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்பட்டது.

தற்போது 26 கட்சிகளும் ஒருங்கிணைந்து வழங்கியுள்ள பெயர், ‘இந்தியா’. Indian National Democratic Inclusive Alliance.அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *