
சென்னை:
ஓயாமல் உழைத்தவர் கலைஞர், அவருடைய மகனாக இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்றைக்கும் மக்களுக்காக மட்டுமே உழைப்பேன் எனவும், தமிழ்நாட்டிற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன், உடம்பில் கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன் உழைப்பேன் எனச் சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை மக்களுடன் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகை கொளத்தூர் தொகுதி மக்களுடன் கொண்டாடப்பட்டது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு தி.மு.க. நிர்வாகிகளுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கியும், பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தும், அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தும், கொளத்தூர் தொகுதி மக்களுடன் கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” பொங்கல் விழா மட்டுமல்ல கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலும் ரம்ஜான் என்றாலும், இந்தக் குளத்தூர் தொகுதியைப் பொருத்தவரை எந்த விழாவாக இருந்தாலும் அதில் நான் முன் இருப்பேன் என்று அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் இந்தப் பொங்கல் விழாவில் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் என் தொகுதி மக்களுடன் சந்திப்பது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
தற்போது உங்களுக்கு இருக்கும் ஆனந்தம் தான் எனக்கும் உள்ளது இந்த மேடை மட்டும் இல்லை என்றால் நானும் உங்கள் அன்போடு கலந்து கொண்டு கைதட்டி மகிழ்ந்து இருப்பேன்.
சட்ட மன்ற கூட்டதொடர் எவ்வளவு பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும் அதை முடித்த கையோடு தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன்.
தற்போது உங்களை அனைவரையும் பார்த்ததில் அனைத்து பாரமும் குறைந்த படி உள்ளது. எப்படி என்னையும், உங்களையும் பிரிக்க முடியாதோ அதே போல் திமுகவையும் பொங்கலையும் பிரிக்க முடியாது. உணர்வோடும் உற்சாகமாகவும் கொண்டாட கூடிய பண்டிகை தான் இந்தப் பொங்கல்.
ஏனெனில் பொங்கல் பண்டிகை மட்டும்தான் வன்முறை இல்லாத ஜாதி மதம் இல்லாத பண்டிகையாகத் தான் பொங்கல் பண்டிகை உள்ளது. ஏழை எளிய மக்கள் கொண்டாட கூடிய விழாவாகவும் விவசாயிகள் மற்றும் அனைத்து மக்களும் கொண்டாட கூடிய பண்டிகையாகப் பொங்கல் உள்ளது.
இன்றைக்கு யார் யாரோ பெரியாரைப் பற்றிப் பேசக்கூடிய சூழல் உருவாக்கியுள்ளது ஆனால் அவர்களைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. தனது உயிர் பிரிகின்ற நேரத்திலும் தமிழ் சமுதாயம், மனித உரிமைக்காகப் போராடிய மாபெரும் உன்னதமான மனிதர் பெரியார்.
மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து இந்த அரசு செய்து வருகிறது. புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டத்தின் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
திராவிட மாடல் அரசுத் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எந்தவித குறையுமின்றி நிறைவேற்றி உள்ளது.தொடர்ந்து திமுகவின் சாதனைகளையும் நல திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார்.
நம்முடைய ஆட்சி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அந்த நம்பிக்கையில் தான் இன்று நடைபெற்ற சட்டசபையில் ஐந்து முறை கழகத் தலைவர் கலைஞர் இருந்தார்.ஆறாவது முறையாக நான் பதவி ஏற்றேன், அதே போல் அடுத்த முறையும் நாமே இருப்போம் என்று கூறினேன்.
இவை அனைத்தும் ஆட்சிக்கு வர வேண்டும் பந்தாவாக இருக்க வேண்டும், பதவி ஆசை பிடித்தோ கிடையாது மனதார சொல்கிறேன் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே.
ஓயாமல் உழைத்தவர் கலைஞர் அவருடைய மகனாக இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்றைக்கும் மக்களுக்காக மட்டுமே உழைப்பான், பாடுபடுவான்.
தமிழ்நாட்டிற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். உடம்பில் கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன் உழைப்பேன் உழைப்பேன்” என்றார்.


