
புதுடில்லி: சமீப காலமாக மத்திய அரசு மீது தெரிவித்து வந்த பழைய புகாரை அடுத்து எதிர்கட்சிகளுக்கு புதிய பிரச்சனை கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
மணிப்பூர் கலவரம், விலைவாசிஉயர்வு, நீட் தேர்வு , பட்ஜெட்டில் மாநிலங்கள் புறக்கணிப்பு, வக்புவாரிய சட்ட திருத்தம் ஆகியவற்றை காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான அம்புகளாக பயன்படுத்தி வந்தது. இந்த பிரச்னைகளை முன்வைத்து பார்லி.,யும் முடங்கியது. இதற்கு எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.
இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் , இந்தியாவின் அதானி குரூப் மற்றும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய தலைவர் மாதாபிபுரிபூச், அவரது கணவர் தவால்புச் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ளது. மேற்கூறிய இருவரும், அதானியின் நிதி நிறுவன முறைகேடு தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்., தற்போது வலியுறுத்தி உள்ளது.
பார்லி., நிலைக்குழு விசாரிக்குமா?
காங்., மூத்த தலைவரான ராஜ்யசபா எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறியிருப்பதாவது: அதானி மீதான புகாரை விசாரிக்க செபி தலைவருக்கு அருகதை இல்லை. இவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பார்லி., நிலைக்குழு அமைக்க வேண்டும். அப்போது தான் உண்மைகள் வெளிவரும். அதானி மீதான புகாரில் பெரும் மோசடி நடந்திருக்கிறது. 2022 ல் செபி தலைவரை கவுதம் அதானி சந்தித்தது இப்போது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆம்ஆத்மி கட்சியும் முழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. எப்படியோ எதிர்கட்சிகளுக்கு அரைக்க அவல் கிடைத்து விட்டது.
செபி தலைவரை கைது செய்ய வேண்டும். அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
அதே நேரத்தில் அதானி குழுமம் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.


