சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை!

Advertisements

சென்னை:

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.

இதனால் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

காற்று பலமாக வீசுவதால் பல பகுதிகளில் அதிகாலையிலேயே மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கின.

திருநின்றவூர்-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் மையத்தடுப்பு சுவர்வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

பட்டாபிராம் மெயின் ரோடு, தென்றல்நகர், ஆவடி வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சரஸ்வதி நகர், பிரகாஷ் நகர் ஆகிய பகுதிகளில் பெருமளவு வெள்ளம் தேங்கியது.

மணலி விரைவு சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கனரக வாகனங்கள் கூடச் செல்ல முடியாதபடி தத்தளித்தன. எம்.ஜி.ஆர். நகரில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. கார்கில் நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் தேங்கி உள்ளது.

ராயபுரம் மாதா சர்ச் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் ஒரு அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.

வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர், ராயபுரம், ஆட்டு தொட்டி, மின்ட் தெரு, வால்டாக்ஸ் ரோடு ஆகிய இடங்களில் சாலைகள் அனைத்தும் ஆறுகள்போல் காட்சி அளிக்கின்றன.

கொடுங்கையூர் தென்றல் நகர் ஒன்று முதல் 5-வது தெருவரை மக்கள் வெளியே செல்ல முடியாத படி தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பூந்தமல்லி சாலை ரித்தர்டன் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கோயம்பேடு மெட்ரோ பாலம் வழியாக மார்கெட்டுக்கு செல்லும் பாதையில் பெருமளவு தண்ணீர் தேங்கியது.

அய்யப்பன்தாங்கல் முதல் காட்டுப்பாக்கம் வரை மெயின் ரோட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சேப்பாக்கம் வாலாஜா சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வேளச்சேரியில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி வெள்ளச்சேரி போல் காட்சியளித்தது. தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகனங்கள செல்ல முடியவில்லை.

ஏராளமான மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றினாலும் கொட்டிய மழைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பல இடங்களில் வெளியேற்றப்படும் தண்ணீரை சாலைகளில் விட்டதால் மீண்டும் பெருக்கெடுத்தது.

பரபரப்பாகக் காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சேடியது. பலத்த காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *