
காசா-இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கான அமைதி உச்சி மாநாடு எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற உள்ளது.
எகிப்து நாட்டின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் அமைதி உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. காசாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மற்றும் 20-க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் எகிப்து அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை மத்திய அரசு உறுதி செய்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்குப் பதிலாக இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது. ஏனெனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்துள்ளது.
ஆயுதங்களைத் துறப்பது, காசாவில் இருந்து வெளியேறுவது போன்ற நிபந்தனைகள் அபத்தமானவை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நிகழ்வையும் ஹமாஸ் புறக்கணித்துள்ளது.




