
சென்னை:சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கூட்டணிகுறித்து கொள்கை அடிப்படையில் தான் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அதிமுக சிறப்பாகச் செயல்படுவதால் தான் அதைப் பற்றி விஜய் விமர்சிக்கவில்லை.
ஒரு கட்சியின் தலைவராக உள்ள விஜய் அவரது கட்சியின் கருத்தைத் தான் வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய் கூறியது சரியா? தவறா? என நான் எப்படி கூற முடியும்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.விஜயை ஏற்றுக்கொள்வீர்களா.. ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா.. என்ற கற்பனை கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
கொள்கை நிலையானது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமைப்பது கூட்டணி என்பது அதிமுகவின் நிலைப்பாடு.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுள்ள நிலையில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
பாஜகவும் திமுகவும் ரகசிய உறவு என நாங்கள் ஏற்கனவே கூறியதை தான் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட மற்றவர்களும் கூறுகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தான் கொள்கையே இல்லை.
அதிமுக வாக்குகளை எந்தச் சூழ்நிலையிலும் விஜயால் ஈர்க்க முடியாது.மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பேசுகிறார் விஜய். திமுகவை எதிர்த்துக் குரல் கொடுக்க அதிமுக மட்டும் இருந்துவந்த நிலையில் தற்போது தவெக உள்ளிட்ட சிலரும் ஆரம்பித்துள்ளனர்.அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை பிரிந்து சென்றவர்கள் என இனி சொல்லாதீர்கள் என்று கூறினார்.



