
சேலம்: ‘சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
சேலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும், மேலே இருக்கும் சக்கரம் கீழே வரும், கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். இந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சியல்ல. எந்தக் கட்சிக்கும் நிரந்தர வெற்றியோ, தோல்வியோ கிடையாது. கூட்டணி பலத்தை தான் தி.மு.க., நம்புகிறது. அவர்களுக்குத் தனியாகப் பலம் இல்லை.
நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டேன். 3 முறை பார்லிமென்ட் உறுப்பினராகப் போட்டியிட்டேன். அமைச்சர், முதல்வர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் உங்களால் கிடைக்க பெற்றது.

எனது வெற்றிக்காகப் பாடுபட்டவர்களை கண்ணை இமை காப்பது போன்று காப்பேன். இது உறுதி. லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதிரியும் மக்கள் ஓட்டளிக்கின்றனர். அடுத்து வரும் பைனல் மேட்சில் அ.தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். அ.தி.மு.க., வின் வலிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். கட்டடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதை போல அ.தி.மு.க., வில் கிளை கழகம் வலுவாக உள்ளது.
எதிரிகள் முதுகை காட்டி ஓடிவிட்டனர். தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி சேலம் வருகிறார்கள்; எத்தனை முறை வந்தாலும் சேலம் அ.தி.மு.க., வின் கோட்டை தான். அ.தி.மு.க., வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வர முடியும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை. போதைப்பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் காவல்துறை தலைமை இயக்குநரே கூறியுள்ளார்.

