Edappadi K. Palaniswami: ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை!

Advertisements

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ராஜ்பவன் என்றழைக்கப்படும் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இன்று ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரவுடி ‘கருக்கா’ வினோத்தை கைது செய்துள்ள போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும் , மாண்பையும் , அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழ்நாடு ஆளுனர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத்துறையும் , காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது. இதுதான் விடியா திமுக மாடல்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *