திமுக ஆட்சி அப்பாவி மக்கள் மீது அராஜகம் – சீமான்!

Advertisements

சென்னை: 

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களைக் கைது செய்யக் காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லையென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராம மக்களைக் காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாகக் கைது செய்து இழுத்துச் செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள், விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழக அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர்மீது சேற்றினை வீசியதற்காக, வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக் கூட நிம்மதியாகக் கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களை, அவர்கள் துன்பப்படும் வேளையில் சென்று சந்திக்காது மக்களைத் துயரச்சேற்றில் தள்ளிய அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அமைச்சர் பொன்முடி பொது வாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப் புனிதரா? மகளுக்கும் ஆயிரம் – அம்மாவுக்கும் ஆயிரம் என்றும், ஓசி பஸ் என்றும் தமிழ்நாட்டு மகளிரை இழித்துப் பேசியது, மனு கொடுக்க வந்த மூதாட்டியைத் தலையில் அடித்துத் தாக்கியது என அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்கத் திறனற்ற திமுக அரசு, அமைச்சர்மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழக காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கைது செய்வதில் ஏன் காட்டவில்லை? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூக நீதியா? இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா?

ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப் போக்குடன் திமுக அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மைச் செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *