
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் தி.மு.க. அரசு நாடகமாடுகிறது என்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், இந்த திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது என்றும், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, விவசாயிகள் பார்த்துப் பார்த்து விளைவித்த நெல்மணிகள் எல்லாம் தற்போது பெய்து வரும் மழையில், முளைத்து விவசாயிகள் கண் முன்னே வீணாகிறது என்றும், நெல் கொள்முதலில் பெயிலர் மாடல் திமுக அரசின் குளறுபடியால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்குவதில் சிக்கல், உரத் தட்டுப்பாடு, காலநிலை மாற்றத்தால், காலம் தவறிப் பெய்யும் மழை என்று பல்வேறு சவால்களைக் கடந்து, விவசாயிகள் நெல்மணிகளை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், அந்த நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது எனவும், முந்தைய தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டையாக இருந்த நெல் கொள்முதல், அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் மூட்டையாக அதிகரித்தும்;, 17 சதவீதம் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையிலிருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், நேரடி நெல் கொள்முதலில் மீண்டும், மீண்டும் தி.மு.க. நாடகமாடுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



