
தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா.
சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதால், அதிகளவிலான திரையரங்குகளில் லால் சலாம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது லால் சலாம் படத்துக்கு புது சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்கு முன் போட்ட எக்ஸ் தள பதிவில், அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் கொடுக்கிறோம், மின்சாரம் கேட்டீர்கள் கொடுக்கிறோம், உங்கள் மக்கள் வந்து எங்கள் அழகான பெங்களூரு நகரத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் அதையும் அனுமதித்தோம். இப்படி கெஞ்சிக்கொண்டே இருக்கிறாய் நாங்களும் கொடுக்கிறோம். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா என குறிப்பிட்டு தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார்.
அவரின் இந்த பதிவு தற்போது மீண்டும் பூதாகரமாகி உள்ள நிலையில், தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தன்யா பேசியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் இப்படத்திற்கு தடைவிதிக்க கோரியும், லால் சலாம் கதாநாயகி தன்யா, நடிகர் ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனால் லால் சலாம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களை பற்றி சர்ச்சை கருத்து கூறியதாக தன்யா பாலகிருஷ்ணா விமர்சனத்திற்குள்ளானார். மேலும் பேசிய அவர்,”12 ஆண்டுக்கு முன் நான் பதிவிட்டதாக கூறப்படும் தகவல் – தவறானது) இது ட்ரோல் செய்பவரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. சர்ச்சைக்குரிய கருத்து என்னுடையது இல்லை என்றாலும் துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்தப்பட்டுவிட்டது. என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.


