
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,975 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.,9,10,11 தேதிகளில் சென்னையில் இருந்து 10,975 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.,9,10,11 தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 5.90 லட்சம் பேர் பயணிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பஸ்களுடன், கூடுதலாக 4,675 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,975 பஸ்கள் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கும்,கேகே நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியே, புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கும்
தாம்பரம் மெப்ஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டிவனம், விக்கிவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூருக்கும் பஸ்கள் இயக்கப்படும்.மற்ற ஊர்களுக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.
தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 13ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

