
வாடிக்கால்வாய் பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, பணிகள் எங்கே எங்கே நடந்துள்ளது என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேட்டுள்ள வெள்ளை அறிக்கையை தமிழக அரசு கொடுத்தால், மறுநாளே விவாதத்துக்கு தயார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட திருவிக நகர் தொகுதி மக்களுக்கு மதிய உணவையும் நலத்திட்ட உதவிகளையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். திரு வி க நகர் தொகுதியில் பகுதி செயலாளர் முகுந்தன் கோபால் தலைமையில், 71 வது தெற்கு வட்ட செயலாளர் கே குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வரும் மத்திய குழுவுக்கு தமிழக அரசு உண்மையான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டும் என்றார்.
புயல் பாதிக்கப்பட்ட பாதிப்புகளை மத்திய அரசிடம் மறைத்து காண்பித்தாள் தமிழக அரசு கோரிய நிதி கிடைக்காது என்றும், புயல் வெள்ளத்தால் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு போதிய அளவில் உதவிகளை செய்ய முடியாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் வெள்ளம் ஏற்படும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் ஆணையம் அளித்த அறிக்கை என்ன ஆனது என்றும், திருப்புகழ் அறிக்கை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
அரசின் நிர்வாக திறமையின்மையாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையாலும் தமிழக மக்களை கதிகலங்க வைத்துவிட்டது திமுக அரசு என விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மழை நீர் வடிகால்வாய் அமைத்த ஒப்பந்ததார்ர்களுக்கு உரிய நேரத்துக்குள் பணம் கொடுக்காததால் பல இடங்களில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட திமுக வினரால் வெற்றிபெற முடியாது என்ற அவர், மிக்ஜாம் புயலின் தாக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் வெள்ள நிவாரண நிதியை பெருவதற்கு மத்திய அரசுக்கு எதிர்கட்சி என்ற முறையில் உரிய அழுத்ததை கொடுப்போம் என்ற அவர், மிக்ஜாம் புயலால் பாதித்த இடங்களில் தமிழக முதலமைச்சர் மக்களை சந்திப்பதில்லை என்றும், தலைமைச் செயலாளரும், அதிகாரிகளும் தான் மக்களை சந்திக்கிறார்கள் என்றும், தமிழக முதலமைச்சர் ரிமோட் முதலமைச்சர் போலந்தான் இருக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
மிக்ஜாம் குறித்து போதிய முன்னறிப்புகளை கொடுக்காததால் ஒட்டுமொத்த மக்களும் கடும் கோபமடைந்துள்ளனர் என்ற அவர், 2015 ம் ஆண்டு வெள்ளத்தின் போது அதிமுக ஆட்சியில் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது, அன்றைய விலைவாசியை இன்று ஒப்பிட்டு பார்க்கும்போது 15 ரூபாய்க்கு சமம் எனவும், எனவே 6 ஆயிரம் ரூபாய் என்பதை இன்றைய விலைவாசி உயர்வுக்கேற்ப 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அளிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.


