
கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு ‘ஜேஎன்.1’ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: புதிய வகையான ‘ஜேஎன்.1’ கொரோனா தொற்று, நாடு முழுவதும் பரவி வருகிறது. தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதிவரை இரட்டை இலக்கங்களில் இருந்தது, ஆனால் குளிர் காலநிலை மற்றும் புதிய வகை கொரோனா மாறுபாட்டிற்கு பிறகு பாதிப்பு வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கேரளாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு ‘ஜேஎன்.1’ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகக் கேரளாவில் 1,249, கர்நாடகாவில் 1,240 , மராட்டியத்தில் 914, தமிழ்நாட்டில் 190, சத்தீஷ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 128 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,423 இருந்து 4,334 ஆகக் குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் ஐந்து பேர் கேரளாவிலும், நான்கு பேர் கர்நாடகாவிலும், இரண்டு பேர் மராட்டியத்திலும், ஒருவர் உத்தரபிரதேசத்திலும் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடிக்கு மேல் உள்ளது என்றும் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

