Mannargudi: ரூ 50 லட்சம் மதிப்பில் படகு இல்லம் அமைக்கும் பணி துவக்கம்!

Advertisements

மன்னார்குடியில் ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் பகுதியில் ரூ 50 லட்சம் மதிப்பில் படகு இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும். இந்தக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டில் சுமார் 8 அடி அகலத்தில் 1320 மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 40 லட்சம் மதிப்பில் அலங்கார தடுப்பு வேலிகள் அமைத்து நடைபாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் தெப்பக்குளத்தில் படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் மன்னார்குடி தெப்பக்குளத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலாத் துறை சார்பில் படகு இல்லம் அமைத்துத் தரப்படும் எனச் சட்டமன்றத்தில் அண்மையில் சுற்றுலா வளர்ச்சி கழக துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் இப்பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மன்னார்குடி தெப்பக்குளத்தில் நடந்தது.

இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு ரூ 50 லட்சம் மதிப்பில் படகு இல்லம் அமைப்பதற்கான பணிகளைத் துவக்கி வைத்தார் இப்பணிகள் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனச் சுற்றுலா வளர்ச்சி கழக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *