பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பீஹார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும் சளைக்காமல் பதில் அளித்து வருகிறது. இதற்கு மத்தியில் நவ.,6 மற்றும் நவ.,11ம் தேதிகளில் இரு கட்டங்களாக பீஹாருக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தேர்தல் ஆணையத்திற்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; இந்திய தேர்தல் ஆணையத்தை நான் எந்த செயலுக்காகவும் குற்றம்சாட்ட விரும்பவில்லை.
ஆனால், பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்த சில கேள்விகளுக்கான பதில்களை இந்திய மக்களும், பீஹார் மக்களும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார் .
மேலும், மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, பீஹாரில் 18 வயதை பூர்த்தி செய்தவர்களின் மக்கள் தொகை எவ்வளவு? 18 வயதை பூர்த்தி செய்தோரின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேரின் பெயர்கள் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன? அது 90.7 சதவீதமா? மீதமுள்ள 9.3 சதவீத 18 வயதை பூர்த்தியடைந்த மக்கள் தொகையின் நிலை என்ன? அவர்கள் ஏன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை?
வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை பெயர்கள் தகுதி இல்லாதவை? அதன் எண்ணிக்கை 24,000 இருக்குமா?
வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை வீட்டு எண்கள் காலியாக உள்ளன அல்லது தகுதி இல்லாதவை? அந்த எண்ணிக்கை 2,00,000க்கும் அதிகமாக இருக்குமா? வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எத்தனை பெயர்கள் இரட்டை அல்லது நகல் பதிவுகள்?
அந்த எண்ணிக்கை தோராயமாக 5,20,000 இருக்குமா? என்றும் முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் தேர்தல் ஆணையம் இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பது நிரூபணமாகி உள்ளது என்று ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் சில புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.பீகாரில், ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி யாத்திரை நடத்தினார். இந்நிலையில், ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலி க்கு 2 நாட்கள் பயணமாக சென்றார்.
அப்போது லக்னோ விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்டேர் வரவேற்றனர்.
பின்னர், ரேபரேலியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது எங்களது முக்கிய கோஷம் ‘வாக்கு திருடரே, உங்கள் பதவியை விட்டு வெளியேறுங்கள்’’ என்பதுதான். நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பது நிரூபணமாகி வருகிறது. அதை ஜனநாயக வழிமுறையில் மீண்டும் மீண்டும் நிரூபிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே பீகாரில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மது விலக்கு நீக்கப்படும் என்று பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.28,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் ஜன் சூராஜ் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளுமே மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மது காரணமாகவே இளைஞர்கள் தவறான வழிகளுக்குச் செல்வதாகவும் இதனால் மாநிலம் தழுவிய மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக பீகாரில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நீக்குவோம் என்று பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது. நிதிஷ் குமார் அரசின் மதுவிலக்குக் கொள்கை, மாநிலத்தின் நிதி நிலையைச் சீரழித்து ஊழலுக்கு வழிவகுத்து உள்ளதாகவும் இது பொருளாதாரப் பேரழிவு என்றும் ஜன் சூராஜ் கட்சி விமர்சித்துள்ளது.
மேலும், மது விலக்கை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹28,000 கோடி வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்றும் ஜன் சூராஜ் கட்சி கூறுகிறது. இந்த நிதியைப் பயன்படுத்தி சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெரும் வளர்ச்சி கடன்களை பெறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தி கட்சியின் மூத்த தலைவர் குமார் சௌரவ், ஜன் சூராஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய ஜன் சூராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், மதுவிலக்கை நீக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ₹5 முதல் ₹6 லட்சம் கோடி கடன்களை பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஜன் சூராஜ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு உடனடியாக நீக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தத் தடையால் மாநிலம் ஆண்டுதோறும் சுமார் ₹28,000 கோடி இழக்கிறது. அந்தப் பணத்தை பீகார் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பயன்படுத்தலாம் என்றும். இதன் மூலம் மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.28 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
இதை வைத்து உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து ரூ.5 முதல் ரூ.6 லட்சம் கோடி கடன்களை பெற முடியும். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இதைப் பயன்படுத்தலாம் என்கிறார் பிரசாந்த் கிஷோர் .