
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதத்துடன் வருமான வரி செலுத்தும் படி நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, நேற்று இரவில் மேலும் இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
நாட்டின் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையால் ஏற்பட்ட சச்சரவு தணிவதற்குள், காங்கிரஸுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, மற்றொரு கொடிய பிரசாரத்தை பாஜகவின் முன்கள அமைப்பான வருமான வரித் துறை தொடங்கியுள்ளது.
ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக் கோரி, காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதைத் தொடர்ந்து பாஜக மீது குற்றம் சாட்டிய காங்கிரஸ், “தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8,200 கோடியை திரட்டியுள்ளது. இதற்கு புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்குப் பிந்தைய கையூட்டுகள், போலி நிறுவனங்கள் உள்ளிட்ட வழிமுறைகளை அக்கட்சி பின்பற்றியுள்ளது.
அதேவேளையில், வரி பயங்கர வாதத்திலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. பிற கட்சிகளைப் போல வரிவிலக்கு பெற்றுள்ள கட்சியாக விளங்கும் காங்கிரஸை மக்களவைத் தோ்தலின்போது வருமான வரி செலுத்த கட்டாயப்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பியது.
வருமான வரித் துறையின் நோட்டீஸை தொடா்ந்து, பாஜகவின் வரி பயங்கரவாதத்துக்கு எதிராக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாநில மற்றும் மாவட்ட தலைமையகங்களில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அந்த கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா்.
இந்த நிலையில், வருமானவரி துறையின் இந்த நோட்டீசை தொடர்ந்து நேற்று இரவில் மேலும் இரு நோட்டீஸ்கள் தங்களுக்கு வந்திருப்பதாக தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ், இது காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் வரி பயங்கரவாதம் என்று மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“பிரதமர் மோடி எதிர்கட்சிகளை சீர்குலைக்க நினைக்கிறார்” என்றும், அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில் கர்நாடக துணை முதல் அமைச்சர் டி கே சிவகுமார் வருமான வரித்துறையிடமிருந்து தனக்கு ஒரு நோட்டீஸ் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
“இது ஏற்கனவே முடிந்து போன ஒரு விவகாரம். இந்த நிலையில் மீண்டும் நோட்டீஸ் வந்திருப்பது அதிர்ச்சி அடைகிறது காங்கிரஸையும் இந்தியா கூட்டணி கட்சிகளையும் பார்த்து பயந்துவிட்டதாக” பாஜக மீது அவருக்கு குற்றம் சாட்டியிருக்கிறார்.
பா சிதம்பரம் குற்றச்சாட்டு
இந்த நிலையில், நாட்டின் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் வேலை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில், “பாஜகவின் 8,250 கோடி ரூபாய்தோ்தல் நன்கொடை பத்திரங்கள் ஊழல் நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்கள் நண்பர்களின் நிதியை ஆதரிக்கும் போது, வருமான வரித்துறை வசதியாக காங்கிரஸை குறிவைத்து மற்றொரு ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருக்கிறார்.


