CM Stalin: இனி ‘விடியல் பயணத் திட்டம்’

Advertisements

சென்னை கோட்டையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்…

சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிமை) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கொடியேற்றி வைத்தபின்னர் தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- “இந்தியாவின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது ஆண்டாகத் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, மொழி, பண்பாட்டில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவைக் களைய முயன்றவர் மகாத்மா காந்தி. நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்துச் சேவையெனப் பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம். பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி ‘விடியல் பயணத் திட்டம்’ என்று அழைக்கப்படும்.” இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *