Chitrai Festival: நாளை மறுநாள் மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்!

Advertisements

அழகா் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.

மதுரை: திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதியென அழகர்கோவில் அழைக்கப்படுகிறது. அழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும். அழகா் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் 6.25 மணி அளவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் கள்ளழகர், மதுரை நோக்கிப் புறப்படுகிறார். அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டுச் செல்லும் கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.

22-ந்தேதி அன்று அதிகாலையில் மதுரை புதூர் மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் வகையில் எதிர்சேவை நடக்கிறது. இதற்காகப் பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23-ந்தேதி அன்று காலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்குக் கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

24-ந்தேதி இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடியத் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். 25-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் காட்சி தருகிறார். 26-ந் தேதி அதிகாலையில் பூப்பல்லக்கு விழா நடைபெறுகிறது.

27-ந்தேதி அதிகாலையில் அப்பன் திருப்பதி, ஜமீன்தார் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். அன்று காலை 10.32 மணியிலிருந்து 11 மணிக்குள் அழகர்கோவில் சென்று கள்ளழகர் இருப்பிடம் சேருகிறார். 28-ந் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன், மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *