
இடாநகர்: திபெத்தில், பிரம்மபுத்ரா நதி குறுக்கே பெரிய அணை கட்டும் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அருணாச்சல்லில் அந்த நதியின் குறுக்கே பெரிய தடுப்பணை கட்ட இந்தியா முடிவு செய்துள்ளதாக என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்
சீனக் கட்டுப்பாட்டில் உள்ள டிசாங்போ என்ற பெயரில் ஓடும் பிரம்மபுத்திரா நதி அருணாச்சல் பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைகிறது. இது அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது.
வங்கக்கடலில் கலக்கும் முன்னர் வங்கதேசத்தில் ஓடும் இந்த நதி ஜமுனா என அழைக்கப்படுகிறது. திபெத்தில் இந்த நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக அருணாச்சல்லில் இந்தியா பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது. இதனை அருணாச்சல பிரதேச சட்டசபையில், பேசிய அம்மாநில முதல்வர் பிரேமா காண்டு கூறுகையில் சீனா கட்டும் பெரிய அணைக்கு இந்தியா பதிலடி கொடுக்காவிட்டால், மாநிலம் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும். இதற்குப் பதிலடி கொடுக்கப் பிரம்மபுத்திரா நதியில் தடுப்பணை கட்ட இந்தியா முடிவு செய்துள்ளது.
சீனா கட்டும் அணைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்த அணை கட்டினால், நதி வறண்டு விடும். வெறும் காலால் ஆற்றைக் கடக்க முடியும். அதிக நீரை திறந்துவிட்டால், அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் வங்கதேசத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.அதிக நீர் திறக்கப்படும்போது ஏற்படும் வெள்ளத்திலிருந்து நம்மைத் தற்காத்து கொள்ள பெரிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. நமது கவலையை மத்திய அரசு புரிந்து கொண்டு தடுப்பணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


