Chennai Rains:காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? வானிலை மையம் சொல்வது என்ன?

Advertisements

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளைக் காலைச் சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை:வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட அதிகமாகப் பெய்துள்ளதாகத் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளைக் காலைச் சென்னை அருகே கரையைக் கடக்கும். இன்னும் கரையைக் கடக்காததால் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீத்தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீத்தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீத்தொலைவிலும் நிலைகொண்டுள்ளது

இது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட அதிகமாகப் பெய்துள்ளது. இதன்படி வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்கியது முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 13.8 செ.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 7.1 செ.மீ. இது இயல்பைவிட 94 சதவீதம் அதிகம்” என்று அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் ஏன்..? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சென்னையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால்தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் என்றால் எல்லா இடங்களிலும் 20 செ.மீ அளவுக்கு மேல் கனமழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலு இழக்கவில்லை. எனவே கரையைக் கடக்கும்போது ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம்” என்று பாலச்சந்திரன் கூறினார்.

இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தற்போது கணிக்க இயலாது” என்று கூறினார்.

🔴RED ALERT Heavy Rain Wreaks Havoc in Chennai ! Balachandran Press Meet | Chennai | Very Heavy Rain (youtube.com)

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *