
சென்னை போரூரில் அமைதி வழியில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பதற்கு பாஜக தலைவர்கள் அண்ணாமலை, நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளும், கொலையாளிகளும் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்பினரைக் கைது செய்திருப்பது காழ்ப்புணர்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறிக் கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறுமின்றி, அமைதி முறையில் பேரணி நடத்தக் கூடத் தமிழ்நாட்டில் இடமில்லையா? என்றும், அரசின் இரும்புக்கரம், குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் மட்டும் துருப்பிடித்து இருப்பது ஏன்? என்றும் வினவியுள்ளார்.
தேச நலப்பணிகளில் சேவையாற்றும் தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது என்பதைத் திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
