
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) இணையும் என்று தமிழக பாஜக மேலிட தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது நடிகர் விஜய்யின் மனதிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் தமிழக பாஜக இணை அமைப்பாளர் எம். நாச்சியப்பன் சமீபத்தில் கூறினார்.
பீகார் வெற்றி தேசிய அளவில் மீண்டும் பாஜகவிற்கு ஆதரவாக அலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடிகர் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது என்றும், இந்தக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆதரவு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தரும் என்றும் மாநில நிர்வாகிகள் கூறுகின்றனர். பா.ஜ.க.வின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் மாநாடு நவம்பர் 29 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ளது.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதும், அவர்களின் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதும் ஷாவின் முக்கிய நோக்கமாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக உட்கட்சி மோதல்கள், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் வருத்தங்கள் எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அமித் ஷா இதில் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகளையும் அமித் ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி, தமிழகத்தில் பாஜகவின் நிலையை வலுப்படுத்தும் என பாஜக தலைமை நம்புகிறது. ஏனெனில், தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மேலும், விஜய்யின் நெருங்கிய பிரதிநிதி ஒருவர் அமித் ஷாவைச் சந்தித்து பாஜகவின் திட்டங்களை முதலில் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பொறுத்து, விஜய் நேரடியாக அமித் ஷாவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.



