
Asian Champions Trophy 2023 Hockey | India vs China
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்திப் போட்டியை அட்டகாசமாகத் தொடங்கியுள்ளது…
சென்னை: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. தொடக்க விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரு அணியினருடன் கைலுக்கி போட்டியைத் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சர்வதேச ஆக்கிச் சம்மேளன தலைவர் முகமது தயப் இக்ராம், ஆக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
Asian Champions Trophy 2023 Hockey | India vs China
இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் தென்கொரியா அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் 6-வது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் ஓகா ரியோமா இந்தக் கோலை அடித்தார். 26-வது நிமிடத்தில் தென்கொரியா அணியின் சியோலியோன் பார்க் பதில் கோல் திருப்பினார். இதன் மூலம் அந்த அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. தொடர்ந்து தாக்குதல் பாணியைத் தொடுத்த தென்கொரியா 35-வது நிமிடத்தில் 2-வது கோலைத் திணித்தது. அந்த அணி வீரர் கிம் சங்ஹூ இந்தக் கோலை அடித்து அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். பதிலடி கொடுக்க ஜப்பான் தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்தாலும், தென்கொரியாவின் தடுப்பு ஆட்டக்காரர்களை அதனைத் திறம்பட சமாளித்து கடைசி வரை முன்னிலையை தக்கவைத்து கொண்டனர். முடிவில் தென்கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
இரவில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் அடியெடுத்து வைத்த இந்திய அணி தொடக்கம் முதலே எதிரணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் யுக்தியில் மிரள வைத்தது. 5-வது மற்றும் 8-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அடுத்தடுத்து கோல் போட்டு அமர்க்களப்படுத்தினார். தொடர்ந்து கோல் மழை பொழிந்த இந்திய அணியில் சுக்ஜீத் சிங் (15-வது நிமிடம்), ஆகாஷ்தீப்சிங் (16-வது நிமிடம்), வருண்குமார் (19 மற்றும் 30-வது நிமிடம்), மன்தீப்சிங் (40-வது நிமிடம்) ஆகியோரும் தங்களது பெயரைக் கோல் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். சீனா தரப்பில் 18-வது நிமிடத்தில் இ வென்ஹய், 25-வது நிமிடத்தில் ஜி செங் காவ் கோல் போட்டனர். கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து கிட்டிய இரு பெனால்டி கார்னரை இந்திய வீரர்கள் விரயமாக்கினர். வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருந்தால் இந்தியாவின் கோல் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும். முடிவில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை துவம்சம் செய்து இந்தப் போட்டியை வெற்றியோடு தொடங்கியது.

